இறைவன் ஈந்த பரிசு
ஆண்டவன் அமைத்தான் அகிலத்தை; வகைவகையாய்க்
கோடி உயிர்களைச் சமைத்தான் ஆங்கே
மாண்புடை உயிராய் மானுடத்தைப் படைத்துப்பல்வேறு பணிகளால் உயர்வுறச் செய்தான்
மாண்புறு பணியாம் ஆசிரியப் பணிதனைப்பாங்காய் எமக்கே பரிசாய்க் கொடுத்தான்
பூண்டோம் அதனை மகுடமாய்; என்றும்பூரிப்பில் திளைத்துப் பணிபுரிகிறோம் யாமே!
மெய்ஞ்ஞான ஒளி
அகரமுதல் னகரமீறாய் ஏமுதல் இசட்டுவரை
கரம்பிடித்துக் கற்பித்து உயர்கல்வியும் ஊட்டி
சிகரத்தை எட்டிப் பிடிக்கச் செய்தவர்யார்?பக்கம் பக்கமாய்ப் பாடம்புகட் டுவதோடு
அகிலத்தைக் கண்டுணர ஆயிரமதிப் பீடுகளால்அஞ்ஞான இருளகற்றி மெய்ஞ்ஞான விளக்கொளியார்?
நிகரில்லா வீரனாம் சிவாஜி கிரேக்கவீரன்அலெக்சாண்டர் உயர்வுக்குக் காரணமவர் தம்குருக்களே
உருவாக்குநர்
மருத்துவர் பொறியியலார் அரசியலார் அறிவியலார்
மாவட்ட ஆட்சியர் சட்டதிட்ட வல்லுநர்
சரித்திரம் படைத்திட்டோர் வேளாண்துறை யினர்நெசவர்ஒட்டுநர் நடத்துநர் ஆடுநர் பாடுநர்
கருத்துமிகு எழுத்தாளர் கவின்மிகு பேச்சாளர் எஞ்சிய துறையினர் உருவானது எவரால்?
பெருத்த புகழைப் பாருக்களித்து அறப்பணியாற்றும்ஆசிரியப்பணி தனையறைந்திட ஒண்ணுமோ? சொல்வீர்!
ஆற்றுப்படைஞர்
விடியலைத் தேடிடும் இளைஞருக்கு வடிகாலாய்
நக்கீரர் முருகனிடம் உருத்திரர் இளந்திரையனிடம்
முடத்தாமர் வளவனிடம் கௌசிகனார் நன்னனிடம்நத்தத்தனார் நல்லியனிடம்[கோடன்] ஆற்றுவிக்கும் பான்மைபோல்
தடமாறா தாற்றுவித்துத் தோணியாய்க் கரைசேர்த்துஏணியாய் ஏற்றுவித்தவர் ஆசிரியர் குலமன்றோ!
கடமையை உடைமையாக் கிக்கன்னல் மொழிபேசிஇன்னல் நீக்கிடும் கலங்கரைதீ பமும்நாமே!
நம்பணி
கல்லாமை என்னும் காரிருள் அகற்றி
அறிவுக்கண் திறந்திடும் அறிவுப்பணி
ஒல்லும் வகையெல்லாம் ஒப்பற்ற பணிபுரிந்துஉவப்பை அள்ளித்தரும் அன்புப்பணி
செல்லுமிட மெல்லாம் சிறப்பினை ஈட்டிச்செல்வாக்குப் பெற்றுத்தரும் சீர்மிகுபணி
மல்லல்மா ஞாலத்தில் உயர்வெய்திட நல்வழிநல்கிடும் நற்பணி நம்பணி.
நல்லாசிரியர்
அப்பணிதனை அயரா தாற்றிப் பொறுமையில்
நிலனாய்ப் பெருமையில் மலையாய்
எப்பொழுதும் ஒப்ப நோக்கில் நிறைகோலாய்நற்செயலில் நறுமலராய் மணம்வீசி
அப்பழுக்கற்ற ஆசானாய் அவனியை வலம்வந்துஒப்பற்ற புத்துலகு கண்டிட
சொப்பனம் காண்போம் யாமே! மண்ணகத்தில்விண்கண்டு மகிழ்வோம் என்றும்!
சத்தான பணிதனைச் சத்தமின்றி ஆற்றிவரும்
குருகுலமே! நம்சொத்தான மாணாக்க முத்துகளைப்
பத்தரை மாற்றுத் தங்கங்களாய்ப் பரிமளிக்கஉள்ளத்தைப் பண்படுத்தும் உழவராவோம்! வக்கிரப்
புத்தியுடை ஆசிரியரால் நம்மினம் மாசுறாதுகாத்திடுவோம்! நோயில்தாய் துயரில் தோழராவோம்
வித்துகள் விளையட்டும் நம்அறப்பணி தொடரட்டும்தரணி இனிநமக்குப் பரணி பாடட்டும்
வாழ்க நம்பணி தொடர்பணியாய் அருட்பணியாய்;
வளர்க நம்பணி உயர்பணியாய்; உயிர்ப்பணியாய் ;
-- ஜெயஜோதி